டிரெண்டிங்

வேப்பூர்: 5 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!

வேப்பூர்: 5 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!

kaleelrahman


வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையால் 5 மணிநேரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.


கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தபடுகிறது. இந்த ஆட்டு சந்தை பராமரிப்பு வேலைக்காக தற்போது மூடப்பட்டது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் தற்போது ஆட்டுசந்தை நடைபெற்று வருகிறது.


வேப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய நச்சலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடத்திற்காக வாரச் சந்தைக்கு கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை ,உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. இந்த ஆடுகளை வாங்க திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.


ஒரு ஆட்டின் விலை 7000 முதல் 20,000 வரை விலைபோனது. வழக்கத்தை விட ஒரு ஆட்டின் விலை 2000 வரை கூடுதலாக விற்பனையானதாகவும் தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலை 4 மணி முதல் 8 மணிக்குள் 5 மணி நேரத்தில் 7500 ஆடுகள் விற்பனையானது இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தனர். இதனால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.