டிரெண்டிங்

கோவா தேர்தல்: கடந்த காலத்தில் கிடைத்த பாடம் - உஷாரான காங்கிரஸ் எடுத்த முக்கிய 'மூவ்'

கோவா தேர்தல்: கடந்த காலத்தில் கிடைத்த பாடம் - உஷாரான காங்கிரஸ் எடுத்த முக்கிய 'மூவ்'

JustinDurai

கோவாவில் கடந்த காலங்களில் நடந்தது போன்ற கட்சித் தாவல் ஏற்படாமல் தடுக்க, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகக்கூடும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்புகளும் அவ்வாறே கூறியுள்ளன. இதனால் கோவாவில் ஆட்சி அமைப்பதில் பாஜக - காங்கிரஸ் இடையே இழுபறி நிலவும் என்று கருதப்படுவதால், தங்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதைத் தடுக்க ஒட்டுமொத்தமாக அனைத்து வேட்பாளா்களையும் பாதுகாப்பாக தங்க வைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வடக்கு கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வழக்கமாக சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை யாரும் அணுக முடியாத வகையில் பாதுகாப்பது வழக்கம். ஆனால், இந்த முறை வேட்பாளா்களையே பாதுகாக்கும் நிலை கோவாவில்  ஏற்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கோவாவில் 17 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், இதர கட்சிகள், சுயேச்சை ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பாஜகவில் இணைந்தனா். எனவே இந்த முறை ஒட்டுமொத்த வேட்பாளா்களையும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக வைத்துள்ளது.

பாஜக அல்லாத கூட்டணி அரசு அமைய காங்கிரஸுடன் ஒத்துழைக்க ஆம் ஆத்மி ஆர்வம் காட்டி வருகிறது. பாஜக அல்லாத எந்த கூட்டணிக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: மகுடம் சூடப்போவது யார்? 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று