டிரெண்டிங்

கேஸ் சிலிண்டர் வெடித்து 3பேர் உயிரிழப்பு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆறுதல்

கேஸ் சிலிண்டர் வெடித்து 3பேர் உயிரிழப்பு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆறுதல்

kaleelrahman

ஆரணியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 3 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் ரோட்டில் பூ வியாபாரி முத்தாபாய் என்பவர் தனது வளர்ப்பு மகள் மீனாவுடன் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டில் ஜானகிராமன், காமாட்சி தம்பதியினர், ஹேமநாத், சுரேஷ் என்ற தங்களது பிள்ளைகளுடன் வாடகைக்கு குடியிருந்தனர்.


இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக முத்தாபாய் வீட்டிலுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்துள்ளதாக தெரிகிறது. இதனை சரி செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் வீட்டில் மேற்கூரையும் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலிண்டர் வெடித்ததில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது.


வீட்டில் உள்ளே இருந்த 6 பேரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து முத்தாபாய் வீட்டின் அருகில் இருந்த முன்னாள் இராணுவவீரர் முத்து என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் சந்திரா என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதையடுத்து 7 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காமாட்சி( 32), சந்திரா (55), ஹேமநாத் (9) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜெ.சி.பி எந்திரம் உதவியுடன் இடிந்த வீடுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.


இதனையடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் விபத்து குறித்து ஆய்வு செய்தனர் மேலும் அமைச்சர் ஆரணி அரசு மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.