டிரெண்டிங்

வலுக்கும் உமர் அப்துல்லா V/S கௌதம் கம்பீர் மோதல்

வலுக்கும் உமர் அப்துல்லா V/S கௌதம் கம்பீர் மோதல்

webteam

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும் கௌதம் கம்பீரும் காஷ்மீர் பிரச்னை குறித்து ட்விட்டரில் காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் மாநில பிரச்னைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு நேற்று காஷ்மீரின் பண்டிப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, “அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 35ஏ யாராவது அழிக்க நினைத்தால் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் தனி பிரதமர்,  தனி ஜனாதிபதி என்ற முறைக்கு திரும்ப வர நேரிடும்”எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக கட்சியில் இணைந்தவருமான கௌதம் கம்பீர் இவ்விகாரம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “உமர் அப்துல்லாவிற்கு சரியான தூக்கம் வேண்டும். அதன் பிறகும் அவர் ஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர் மற்றும் தனி ஜனாதிபதி வேண்டுமென்று கூறினால், அவருக்கு பாகிஸ்தானின் பச்சை நிற பாஸ்போர்ட் தான் தேவைப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் அதிகம் கிரிக்கெட் விளையாடியது இல்லை. அதனால் எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. அதேபோல் உங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்தும் எதுவும் தெரியாது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் வரலாறு மற்றும் தேசிய மாநாட்டு கட்சி காஷ்மீருக்கு ஆற்றிய பணிகள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் உங்களுக்கு எது தெரியுமோ அது குறித்து மட்டும் பதிவிடுங்கள். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் குறித்து ட்வீட் செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சி தலைவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 1953ஆம் ஆண்டிற்கு முன் இருந்த நிலைக்கு செல்லும் எனக் கூறியிருக்கிறார். அதற்கு காங்கிரஸ் கட்சி உரிய விளக்கம் அளிக்கவேண்டும்”எனக் கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் உமர் அப்துல்லா, “என்னுடைய கட்சி எப்போதுமே மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலே உறுதியாக இருந்து வருகிறது”எனத் தெரிவித்தார்.