டிரெண்டிங்

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் தேவை: ஜி.ராமகிருஷ்ணன்

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் தேவை: ஜி.ராமகிருஷ்ணன்

webteam

ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச்‌சட்டம் இயற்றப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 11வது குற்றவாளியான மணிகண்டன் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ஆவார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் கருத்து தெரிவித்த ஜி.ராமகிருஷ்ணன், “எதிர்காலத்தில் இதுபோன்ற சாதிய ஆணவக் கொலை நடைபெறக்கூடாது என்பதற்காகவும், அதை பொதுவாக உணர்த்துவதற்காகவும், வேறு யாரும் இதுபோன்று பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சாதிய ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள இந்திய சட்டம் போதாது. அதற்கென தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்” என்று கூறினார்.