முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் ராய்க்கு நிலக்கரி ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர் திலிப் ராய். இவர் மீதுதான் 1999 ஆம் ஆண்டு ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில் தற்போது தண்டனை கிடைத்துள்ளது.
ஜார்கண்ட் பிரம்மாதியா நிலக்கரி சுரங்கத்தை கேஸ்ட்ரால் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பேரில் கடந்த 2012 ஆம் ஆண்டு திலிப் ராய்க்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திலிப் ராய் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட இரண்டு பேர், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இன்று தீர்ப்பளித்தார்.
முன்னாள் அமைச்சர் திலிப் ராய், அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கெளதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அகர்வாலா ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவாதாக அறிவித்தார். நிலக்கரி ஊழல் வழக்கில் தண்டனையளிக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தகக்து.