5 தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தன்னுடைய மகன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
5 இடைத்தேர்தல்களிலும் 54.54 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். 1,502 வாக்குச்சாவடிகள் சர்ச்சைக்குரியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 35,495 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையே 5 தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது.
பால்லாரி தொகுதியில் உள்ள ஹரஜினடோனி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர். தண்ணீர் பிரச்னை காரணமாக வாக்குப்பதிவை புறக்கணித்து அவர்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில இடங்களில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம்:-
மக்களவை தொகுதிகள்
சிவமொக்கா - 61.05 சதவீதம்
பல்லாரி - 63.85 சதவீதம்
மண்டியா - 53.93 சதவீதம்
சட்டசபை தொகுதிகள்
ராமநகர் - 73.71 சதவீதம்
ஜமகண்டி - 81.58 சதவீதம்
இந்தத் தேர்தலில் பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸும், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும்(ஜேடிஎஸ்) போட்டியிட்டன. பா.ஜனதா சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சிவமொக்கா தொகுதியில் ஜேடிஎஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா, பா.ஜ.க சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றனர். இதனால் இந்தத் தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராமநகரா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதலமைச்சர் குமாரசாமி மனைவி அனிதா போட்டியிட்டுள்ளார்.
வாக்குப்பதிவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “பாஜக இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனது மகன் பிஎஸ்.ராகவேந்திரா சிவமொக்கா தொகுதியில் வெல்வது 101 சதவீதம் உறுதி” என்று கூறியுள்ளார். எடியூரப்பா தனது ஓட்டினை சிவமொக்கா தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் காலையிலேயே பதிவு செய்தார்.