கட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதாகக் கூறி அதிமுக அம்மா அணியின் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சபாநாயகரின் நடவடிக்கை சரியானதா என்று முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் புதிய தலைமுறை இணையதளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “இந்திய அரசியலமைப்பில் மூன்று முக்கியமான துறைகள் உள்ளன. ஒன்று, சட்டம் இயற்றும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம். இரண்டு, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றம். மூன்று, அரசு நிர்வாகம். இந்த மூன்றுக்கும் தனித்தனியே என்று உரிமைகள் உள்ளன. அரசு நிர்வாகத்தில் தவறுகள் நடந்தால் அதை நீதிமன்றம் தட்டிக்கேட்கும். அதைபோல சட்டம் இயற்றப்பட்டத்தில் முறைகேடுகள் இருந்தால் சட்டமன்றத்தை நீதிமன்றம் கண்டிக்கும். ஆனால் இப்படிதான் சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது. உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதைப்போலதான் இதுவும். இந்த 18 எம்.எல்.ஏக்களும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால் சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை நாங்கள் மீறவில்லை என்று அந்த 18 எம்.எல்.ஏக்களும் தெரிவிக்கலாம். அவர்கள் என்ன சொல்கிறார்கள். முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். முதல்வரை மாற்ற வேண்டும் என்றால் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நடைமுறை. அதைவிட்டுவிட்டு ஆளுநரை போய் சந்திக்கக் கூடாது. அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்தான்” என்று கூறினார்.
மேலும், சபாநாயகர் நடவடிக்கை சட்டப்படி சரியானாதா என்ற நம் கேள்விக்கு சட்டப்படி சரியானதுதான் என்றார். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. டிடிவி தினகரன் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடந்துள்ள வழக்கில் நீதிமன்ற சட்டமன்ற விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யலாம். அப்படிதான் நடக்கும் என்றும் கூறினார். மேலும் திமுக, மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தால் ஆட்சி கவிழுமா? என்ற கேள்விக்கு அந்த இடங்களுக்கு மறுதேர்தல்தான் நடத்தப்படும். ஆட்சி கவிழாது என்று விளக்கமளித்தார் நீதியரசர் வள்ளிநாயகம்.