டிரெண்டிங்

உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?

உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?

Veeramani

உத்தரபிரதேசத்தில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்து விட்டது.

உத்தரப்பிரதேசத்தை பொருத்தமட்டில் பாரதிய ஜனதா, சமாஜ்வாடி ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி போட்டி என்பது நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். நாளை காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,250 நபர்கள் முதல் 1,500 நபர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதற்றமான உள்ளூர் வாக்குச்சாவடிகளில் உள்ளூர் காவல் துறையினருடன் துணை இராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் 412 கம்பெனி மத்திய துணை ராணுவப்படைகளை சேர்ந்த 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், குறிப்பாக முசாபர்நகர், அலிகார் மற்றும் மீரட் ஆகிய இடங்களில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநில எல்லைகளில் காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டு அங்கிருந்து வரக்கூடிய வாகனங்களை கண்காணிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் பொருட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கியுள்ளன. 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளுக்கான தனி தொகுதிகள் ஆகும். மொத்தம் 673 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 2.27 கோடி பொதுமக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்போன்று வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு சக்கர நாற்காலி வசதிகள் கண்டிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இடம்பெற வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை 48 மணி நேரம் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது