டிரெண்டிங்

தஞ்சை: பிரசவ வார்டில் தீ விபத்து - குழந்தைகளுடன் அலறியடித்து ஓடி வந்த பெண்கள்

தஞ்சை: பிரசவ வார்டில் தீ விபத்து - குழந்தைகளுடன் அலறியடித்து ஓடி வந்த பெண்கள்

webteam

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் அமைந்துள்ள பிரவச வார்டில் தீ விபத்து ஏற்பட்டதால், கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே வந்தனர்.

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள புதிய பிரசவ வார்டு மாடிக்கட்டடம் தற்போது தான் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. பிரசவ வார்டில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் புதிதாக பிறந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் குழந்தைகள் நல வார்டில் பின்பகுதியில் மின் அழுத்தம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு ஓயர்கள் பற்றி எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அங்கு புகை மூட்டம் சூழ குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக குழந்தைகள் மீட்கப்பட்டு வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.


மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்ததால் குழந்தைகளும் பிரசவ பெண்களும் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து காத்திருந்தனர். பல பெண்கள் மயங்கிய நிலையிலேயே இருந்தனர்.