டிரெண்டிங்

"ஐபிஎல் போட்டிகளின் தலைவிதி ஏப்ரல் 15-க்கு பின்பே தெரியும்"- கிரண் ரிஜிஜூ

"ஐபிஎல் போட்டிகளின் தலைவிதி ஏப்ரல் 15-க்கு பின்பே தெரியும்"- கிரண் ரிஜிஜூ

jagadeesh

ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின்பே தெரிய வரும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் இந்தாண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது. மேலும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் ஒரு சுற்று இந்தியாவிலும், இரண்டாவது சுற்று வெளிநாட்டிலும் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைத்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ " ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு நிலைமைக்கு ஏற்ப புதிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டு வரும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைபோல பார்க்கிறது. ஆனால், நாம் இப்போது விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை குடிமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு போட்டி நடந்தால் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள். இந்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விளையாட்டு துறைக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமானதல்ல, இது அனைவருக்குமானது" என்றார்