தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைக்கும் விதமாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி 20 ஆயிரம் விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதனை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தினகரன், அவர்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார். “விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள விவசாயிகள் டெல்லியில் கூடியிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றம் நோக்கி இன்று அவர்கள் நடத்தும் பேரணியில் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் தமிழக விவசாயிகளும் பெரும் அளவில் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
கடந்த ஆண்டு நூறு நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததைப் போல அல்லாமல், இந்த முறையாவது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தினகரன் குறிப்பிட்டுள்ளார்.