டிரெண்டிங்

12ஆம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி பெண் மருத்துவர் கைது..!

12ஆம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி பெண் மருத்துவர் கைது..!

webteam

தருமபுரியில் 12ஆம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவச் சிகிச்சை பார்த்துவந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட சமுத்திரம் 4 வழிச்சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவர் ஒருவரின் பெயரில், அவரது சகோதரி போலியான வகையில் அங்கு மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் கற்பக வடிவு மற்றும் அரசு வட்டார மருத்துவ அலுவலர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், அரசு மருத்துவர் பெயரில் விளம்பரப் பலகை வைத்து, படிக்காத ஒருவர் போலியான வகையில் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் வெங்கட சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகள் தேவி (40) என்பது தெரியவந்தது. மேலும் தேவி, மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்காமல், 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலியான வகையில் மருத்துவச் சிகிச்சைகள் அளித்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.

அந்த மருத்துவமனையிலிருந்து ஏராளமான ஊசிகள், மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர், போலி மருத்துவர் தேவியைக் கைது செய்தனர்.