டிரெண்டிங்

மாநகராட்சி அதிகாரிகள் எனக் கூறி தனியாக வசித்த வயதான தம்பதியிடம் 30 பவுன் நகை, பணம் கொள்ளை

மாநகராட்சி அதிகாரிகள் எனக் கூறி தனியாக வசித்த வயதான தம்பதியிடம் 30 பவுன் நகை, பணம் கொள்ளை

kaleelrahman

மாநகராட்சி அதிகாரிகள் என கூறி வீட்டில் நகை, பணம் திருட்டு பெங்களூருவிலிருந்து மகன் வரும்வரை இரண்டு நாள் காத்திருந்து புகார் அளித்த வயதான தம்பதியினர்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட புத்தூர் அருகே உள்ள பாரதி நகரில் சுப்ரமணியன் (75) என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் என கூறிக்கொண்டு இவருடைய வீட்டிற்கு இருவர் வந்துள்ளனர். பாதாள சாக்கடை இணைப்பு சம்மந்தமாக ஆய்வு செய்ய வந்திருப்பதாக கூறிய அவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சுப்ரமணி மற்றும் அவரது மனைவியிடமும் பேசிகொண்டு வீட்டை சுற்றி பார்த்து விட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு 12-ம் தேதி காலை சுப்ரமணியனின் மனைவி வீட்டின் பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெங்களூருவில் வசிக்கும் தனது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவிலிருந்து மகன் வந்ததும் நடந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சுப்ரமணி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுப்ரமணி வீட்டிற்கு வந்தவர்கள் யார், அவர்கள் தான் பணம், நகையை திருடினார்களா அல்லது வேறு யாரேனும் திருடினார்களா எனவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.