டிரெண்டிங்

 சானிடைசர் பாட்டில் சூரிய வெப்பத்தால் வெடித்து கார் தீப்பிடித்ததா? - வைரலான போலி செய்தி 

 சானிடைசர் பாட்டில் சூரிய வெப்பத்தால் வெடித்து கார் தீப்பிடித்ததா? - வைரலான போலி செய்தி 

webteam
 சமூக வலைத்தளம் என்பதே சந்தேகங்களின் கூடாரம். அதில் வெளியாகின்ற பல அதிர்ச்சி ரக செய்திகளை உண்மை என்றே பெரும்பாலானோர் உடனே நம்பி விடுகின்றனர். மேலும் அதன் உண்மைத் தன்மையைப் பரிசோதிப்பதற்குள் அந்தச் செய்தி உலகம் முழுக்க ஊடுருவிடுகிறது. அப்படி ஒரு செய்தி இப்போது வலம் வர ஆரம்பித்திருக்கிறது.
கார் ஒன்றின் முன்பக்கம் பொருட்களை வைப்பதற்காக உள்ள பெட்டி  ஒன்று எரிந்த நிலையில் உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், அதில் வைக்கப்பட்டிருந்த கை கழுவும் சானிடைசர் பாட்டில் அதிக சூரிய வெப்பத்தில் வெடித்து எரிந்ததாகவும் அதனால் இந்த காரின் முன்பக்கம் தீக்கிரையாகிவிட்டதாகவும் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். 
உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் இப்போது  கைகளில் சானிடைசர் பாட்டில்களுடன் பயணித்து வருவதால், அந்தச் செய்தி உடனே கவனிக்கப்பட்டது. அது குறித்த அச்சத்தால் உடனடியாக அந்தச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர ஆரம்பித்தனர். ஆகவே அது வைரலானது.  
இதனையொட்டி இந்தியாவிலும் ஒரு செய்தி இதேபோல் பரவியது. டெல்லியிலுள்ள சாலை நடுவே தீப்பற்றி எரியும் காரின் வீடியோவை பகிர்ந்த ஒருவர், அதன் உள்ள இருந்த சானிடைசர் அதிக சூரிய வெப்பத்தால் வெடித்துச் சிதறியது என்றும் ஆகவே அந்த கார் தீப் பிடித்தது என்றும் அதன் உள்ள இருந்த ஓட்டுநர் இறந்துவிட்டார் என்றும் கூறியிருந்தார். அடுத்தடுத்த இதேபோல் இரண்டு செய்திகளைக் கண்ட நெட்டிசன்கள் பதறிப்போய் அதையும் விடாமல் ஷேர் செய்தனர். 
இது குறித்து உண்மைத்தன்மை அறியப் பலரும் இப்போது முயன்று செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ‘இந்தியா டுடே’ இந்தத் தகவல் உண்மையா? அதிக வெப்பத்தால், குறிப்பாகச் சூரிய வெப்பத்தால் சானிடைசர் தீப்பிடிக்குமா? அப்படி தீப்பிடித்ததாகக் கூறப்படும் செய்தியில் உண்மை இருக்கிறதா என விளக்கி செய்தி வெளியிட்டுள்ளது.  அவர்கள் நடத்திய விசாரணையில் சில விளக்கங்களை நிபுணர்கள் அளித்துள்ளனர். மேலும் தற்போது சானிடைசர் பாட்டில் அதிக வெப்பத்தால் வெடித்துத் தீப்பிடித்தாக பரவிய அந்தச் செய்தி உண்மையானதல்ல என்றும் கண்டறிந்து விளக்கியுள்ளனர். 
பொதுவாக கை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் சானிடைசரில் ஆல்கஹால் இருப்பது உண்மைதான். ஆல்கஹால் தீப்பிடிக்கும் குணமுடையதுதான். ஆனால் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் தீப்பிடிக்குமா என்பதுதான் இப்போது நாம் அறிய வேண்டிய செய்தி.  டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது.  ஆனால் அந்த அதிக வெப்பம் சானிடைசர் பாட்டிலை வெடிக்கச் செய்யுமா?
ஒரு சானிடைசர் பாட்டில் "தானாகவே தீப்பிடித்து வெடிக்க" எவ்வளவு வெப்பநிலை தேவை? இந்தக் கோடை வெயிலில் பல மணிநேரங்களுக்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கார் எவ்வளவு சூடாகிறது? அதைக் கொண்டு சானிடைசர் பாட்டில் வெடிக்குமா? எனப் பல கேள்விகள் பொதுமக்களுக்குத் தோன்றுவது இயற்கையே? ஆனால் அந்தச் சந்தேகம் அதிகப்படியான சந்தேகம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இப்போது உள்ள வெப்பநிலைக்கு சானிடைசர் பாட்டிலைத் திறந்தாலே அது உடனே ஆவி ஆகிவிடும். அப்படி இருக்கும் போது எப்படித் தீப்பிடிக்கும் எனக் கேட்கின்றனர். 
ஒருவர் ஒரு பொருளை வெளியிலிருந்து பற்றவைக்காமல் சாதாரண வளிமண்டலத்தில் நிலவும் வெப்பத்தைக் கொண்டு தன்னிச்சையாகவே தீப்பிடிக்கலாம். ஆனால் அது அரிது. குறிப்பாக  சானிடைசர்களில் எத்தில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் தானாகப் பற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கான வெப்பநிலை 363 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்க வேண்டும். இவ்வளவு வெப்பநிலை இருந்தால் காரில் உள்ள பல பொருட்கள் உருகியே போய் விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.  மேலும் “அறிவியல்பூர்வமாக சூடான காரில் உள்ள ஒரு  சானிடைசர் பாட்டில் வெடித்துச் சிதறுவது சாத்தியமே இல்லை எனக் கூறுகிறார் தீயணைப்பு நிபுணர் டி.கே. ஷம்மி. இவர் இந்திய அரசின் தீயணைப்பு ஆலோசகரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.