டிரெண்டிங்

ரயில்வே பட்ஜெட்: தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?

ரயில்வே பட்ஜெட்: தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?

jagadeesh

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறை தொடர்பாக தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழும். ஆனால் ரயில்வே துறையை பொருத்தவரை புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு பதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தவே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நீண்ட காலங்களாக நிலுவையில் உள்ள திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக மதுரை - கன்னியாகுமரி இடையே இரட்டைப்பாதை திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரம் திண்டிவனம் - திருவண்ணாமலை, ஈரோடு - பழனி, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீட்டர்கேஜிலிருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்ட சென்னை - ராணிப்பேட்டை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - போடிநாயக்கனூர், திருவாரூர் - காரைக்கால் ஆகிய பாதைகளில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. செங்கோட்டை - கொல்லம் பாதையில் இரு ரயில்களே இயக்கப்படுகின்றன. சேலம் - அரக்கோணம் இடையே மெமு எனப்படும் மின்சார ரயில் சேவை அண்மையில் தொடக்கப்பட்ட நிலையில் இது போன்று சில நூறு கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு இடையில் உள்ள நகரங்களுக்கு இடையே அதிகளவு மின்சார ரயில்கள் விடுவது மிகவும் பயன்தரும் என கூறப்படுகிறது.

இது தவிர தமிழகத்திற்கு புதிய ரயில் சேவைகளும் அவசியம் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. மேலும் விவசாய விளைபொருட்களை விரைவாக சந்தைகளுக்கு கொண்டு சேர்க்க கிசான் ரயில் வட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது போன்ற ரயில்கள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள ஏழைகள், சாமானியர்களின் போக்குவரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது ரயில்கள்தான். ஏனெனில் பேருந்து, விமானம் ஆகிய மற்ற பொதுப் போக்குவரத்து முறைகளை விட ரயில்களே குறைந்த கட்டணத்தில் சேவை தருபவை. இந்த சூழலில் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என அரசு கூறியுள்ளது ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரயில் சேவை ஏழை எளியோருக்கு உகந்ததாக தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.