என்னை மாற்றுவதற்கான முழு உரிமை ராகுல்காந்திக்கு உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தப் படுதோல்விக்கு பொறுப்பேற்று அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி விலகினார்.
அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் எனப் பலரது பெயர்கள் வெளியானது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் பதவி வகித்த வந்த நிலையில் தற்போது மீண்டும் தலைவரை மாற்றி காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து அவருக்கு நன்றியை தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுல்காந்தி தலைமையில் சேர்ந்தேன். அதன்பின்னர், அகில இந்திய செயலாளராக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலே பணியாற்ற கூடிய வாய்ப்பை தந்தார். பின்னர், தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக பணியாற்றக்கூடிய வாய்ப்பை கொடுத்தார்.
சுமார் இரண்டரை ஆண்டுகாலம் பணியாற்றி சுமார் 30 ஆயிரம் பேரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்த்துள்ளோம். சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியாவில் முதன்முறையாக காங்கிரஸுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் 125 இடங்களில் 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கண்டெடுத்து ஆங்காங்கே இருக்கும் அறக்கட்டளைக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
இதற்காக ராகுல்காந்தி தன்னை பாராட்டி இந்தியா முழுவதும் சொத்து மீட்புக் குழுவை ஏற்படுத்தினார். பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் ஊழலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். மக்கள் பாராட்டக்கூடிய அளவுக்கு தொடர்ந்து பாடுபட்டோம். என்னை காங்கிரஸ் தலைவராக நியமித்தது ராகுல்காந்திதான். என்னை மாற்றுவதற்கான முழு உரிமை ராகுல்காந்திக்கு உள்ளது. என்னை மாற்றுவதற்கு முன்பே என்னிடம் தகவல் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும்போது எப்படி செயல்பட்டனோ அதை விட தற்போது இன்னும் வேகமாக செயல்படுவேன். நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் ராகுல் பிரதமராவதற்கும் நான் எந்தத் தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். மேலும் ராகுல் காந்தி ஆலோசனையின்படி தொடர்ந்து செயல்படுவேன். அவர் என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். நானும் அவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.