மனிதனின் பழமைவாய்ந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கடிகாரங்கள். முன்பு சுவற்றில் மாட்டும் வகையில் இருந்த கடிகாரங்கள் தற்போது கைகளில் கட்டவும், பாக்கெட்டில் போன்களாகவும், லாக்கெட்களாகவும் வைத்து பல நவீன அம்சங்களோடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எத்தனை டிஜிட்டல் முறையில் கடிகாரங்கள் இருந்தாலும் முற்கள் கொண்ட கடிகாரங்களே எப்போதும் அனைவருக்கும் ஏற்ற கடிகாரமாக இருக்கும். அப்படியான கடிகாரத்தின் நொடி முள்ளை முதலில் பார்க்கும் போது ஒரு நொடியில் இருந்து அடுத்த நொடிக்கு செல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
உண்மைதான். கடிகாரத்தின் நொடி முள்ளை பார்க்கும் போது, முதல் டிக்கிற்கும், அடுத்த டிக்கிற்கும் ஒரு பெரிய இடைவெளி இருப்பதை உணரமுடியும். இது கற்பனையோ, கட்டுக்கதையோ அல்ல. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அது எப்படி என பார்ப்போம். AsapSCIENCE என்ற யூடியூப் சேனலின் ஹோஸ்ட் ஒருவர் நொடி முள்ளில் அந்த நீண்ட gap வருவது குறித்து விவரித்திருக்கிறார். அதன்படிம் கண்களுக்கு இரண்டு வகையான செயல்பாட்டு முறை உண்டு. அதில் ஒன்று Smooth Pursuit , மற்றொன்று Saccades.
இதில் Smooth Pursuit செயல்பாடு என்பது மெதுவாக நகரும் ஒன்றைப் பார்ப்பதையும், Saccades என்பது, ஒன்றை பார்க்கும் போது அது சட்டென அடுத்த புள்ளிக்கு விரைவாக தாவுவதை உணர்த்துகிறது என்கிறார்.
வீடியோவை காண: இங்கே க்ளிக் செய்க
விளக்கமாக கூறவேண்டும் என்றால், Saccade முறை என்பது Point A-ல் இருந்து Point B-ஐ பார்க்கும் போது அது Aல் இருந்து சட்டென Bக்கு நகரும். இந்த முறையில் மூளையால் எந்த தகவலையும் எடுத்துக்கொள்ள முடியாதபடி இது மிக வேகமாக நடக்கும் என யூடியூபர் கூறியிருக்கிறார்.
எனவே, ஒரு கடிகாரத்தைப் பார்க்கும்போது, கடைசியாகப் பார்த்த வினாடியிலிருந்து நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மூளை எடுத்துக்கொள்ளுமாம். இதன் விளைவாக, முதல் நொடி உண்மையில் மற்ற அனைத்தையும் விட நீண்டதாக தோன்றுகிறது என்கிறார்கள்.