தன்னுடைய தேர்தல் பணிகளை முடக்கவே வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, சென்னை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரிகள், அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். எ.வ.வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருந்த சூழலில் இந்த சோதனை நடைபெற்றது.
குறிப்பாக திருவண்ணாமலையில் மு.க. ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், வியாழனன்று காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை, இரண்டாவது நாளான இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இதுபற்றி எ.வ வேலு, “என்னுடைய தேர்தல் பணிகளை முடக்கவே வருமானவரி சோதனை நடத்தப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.