டிரெண்டிங்

ஈரோடு: உரக்கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கிய 4 கோடி ரூபாய்..!

ஈரோடு: உரக்கடை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கிய 4 கோடி ரூபாய்..!

kaleelrahman

ஈரோடு அருகே உரக்கடையின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை. கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டியில் உள்ள ஸ்ரீநகரில் வசித்து வருபவர் சோமசுந்தரம். இவர் ராயல் பெர்டிலைசர் என்ற பெயரில் மொத்த உர விற்பனை நிலையம் வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு கோவை மற்றும் ஈரோட்டிலிருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் உதவியுடன் திடீரென சோமசுந்திரத்தின் வீட்டினுள் நுழைந்து சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர்.


அதனைத்தொடர்ந்து ராயல் பெர்டிலைசர் உர நிறுவனம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உர நிறுவனத்தில் கொள்முதல் விற்பனை மற்றும் வருமான வரி உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர். வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதனிடையே சோமசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் 12 பேருக்கு சொந்தமான காலி இடம் கோபிசெட்டிபாளையம் மின் நகரில் இருந்ததை நேற்று விற்பனை செய்ததாகவும் 12 பேருக்கு பிரித்து கொடுக்க வேண்டிய தொகை ரூ.4 கோடியை வீட்டில் வைத்திருந்தபோது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அப்பணம் கைப்பற்றபட்டுள்ளதாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சோமசுந்தரம் தரப்பிரனர் தெரிவித்துள்ளனர்.

உர விற்பனை நிலைய உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை செய்து ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.