டிரெண்டிங்

நெருங்கும் சட்டசபை தேர்தல்: பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

நெருங்கும் சட்டசபை தேர்தல்: பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Veeramani

தேர்தல் நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு வழக்கில் முதலமைச்சரின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மொஹாலியில் உள்ள முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தர் சிங் ஹனி என்பவரது இல்லம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணல் சுரங்க ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, பூபிந்தர் சிங் ஹனி, பஞ்சாப் ரியல்ட்டர்ஸ் என்ற நிறுவனத்தை அண்மையில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மணல் சுரங்க ஒப்பந்தத்தில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டிருக்கும் பஞ்சாப் ரியல்ட்டர்ஸ் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அந்நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிறுவனம் தவிர்த்து ஹோம்லேண்டு சொசைட்டி பகுதியில் வசித்துவரும் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி மனைவியின் சகோதரி மகள் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தேர்தலை கருத்தில் கொண்டு அமலாக்கத்துறையின் சோதனை நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும், இதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்தப்பட்ட சோதனையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங்கின் வீட்டில் 4 கோடி ரூபாய், மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் குமாரின் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சில சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் 6 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.