காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தவறான பரப்புரை செய்து வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி அனல் மின்நிலைத்தில் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோலார், காற்றாலை மூலம் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அனல் மின் நிலையத்தின் சில அலகுகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். மின்சாரம் தேவைப்படும் போது அனல் மின் நிலையங்களில் முழுமையான உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை என எதிர்க்கட்சிகள் உண்மைக்கு மாறாக பரப்புரை செய்வதாகவும், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார். மேலும் காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தவறான பரப்புரை செய்து வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடக்கவில்லை என அமைச்சர் தங்கமணி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டுதான் அறிக்கை வெளியிடுவேன் என்பது தெரியாமல் அமைச்சர் ஊழலை மறைக்கப் பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 73 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி கணக்கு காட்டப்பட்டது என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்னை இல்லை என்றால் கணக்கு அதிகாரி 9 கோடியை வசூல் செய்யக் கூறியிருப்பது ஏன் ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் நடைபெறவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.