காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனா கட்சியில் இணைந்தார். முன்னதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார்.
அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின்போது பிரியங்காவிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக காங்கிரசைச் சேர்ந்த சிலர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். சில நாட்களிலேயே அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த பிரியங்கா, கட்சிக்காக உழைப்பவர்களைவிட அடியாட்களுக்குத்தான் காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியிலேயே விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தான் சந்தித்து வரும் நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காதது வருத்தமளிக்கிறது என அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி மேலிடத்துக்கு அனுப்பிவிட்டு அடுத்த சில மணி நேரங்களில் சிவசேனாவில் இணைந்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு உரிய மரியாதை அளித்து கட்சியில் இணைத்துக் கொண்டதற்காக உத்தவிற்கு நன்றி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் வெளியேறினேன் என்று வெளியான தகவலில் உண்மையில்லை” என்று கூறினார். தங்கள் கட்சிக்கு நல்ல சகோதரி கிடைத்துள்ளதாக உத்தவ் தாக்கரே கூறினார்.