டிரெண்டிங்

ஈரோடு: ஆவணங்கள் இல்லாததால் ஏடிஎம்களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ40 லட்சம் பறிமுதல்

webteam

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரு பகுதிகளில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 75 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6 ம் தேதி நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த நிலை கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 2 கோடியே 5 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்களுக்கு நிரப்ப எடுத்து சென்ற அந்த பணத்தில், ஒரு கோடியே 65 லட்ச ரூபாய்க்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. இதனால் மீதமுள்ள 40 லட்ச ரூபாயை மீட்டு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் இளங்கோவனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

இதேபோல், கிழக்கு தொகுக்கப்பட்ட வீரப்பம்பாளையம் பகுதியில் பெருந்துறையை சேர்ந்த பழ வியாபாரியான நசிர் ஷேக்அலி முகமது பாஷா என்பவர் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்பட்டியில், முருகேசன் தலைமையிலான தேர்தல் நிலைக்குழுவினர், சோதனை மேற்கொண்டிருந்தனர். 

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து, கோழி கழிவுகளை இறக்கி விட்டு, நாமக்கல் திரும்பி வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் நாமக்கல் மாவட்டம் என் புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சிவக்குமாரிடம், உரிய ஆவணமின்றி இருந்த ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.