டிரெண்டிங்

“அமமுக வேட்பாளர்கள் பெயருடையவர்களுக்கு குக்கர் சின்னம்” - தினகரன் தரப்பு புகார்

“அமமுக வேட்பாளர்கள் பெயருடையவர்களுக்கு குக்கர் சின்னம்” - தினகரன் தரப்பு புகார்

webteam

அமமுகவுக்கு குக்‌கர் சின்னத்தை பொதுச் ‌சின்னமாக‌ ஒதுக்க முடியாது எனக்கூறிய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலில் போட்டியிடும் சில சுயேச்சைகளுக்கு அதே சின்னத்‌தை வழங்கியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. அமமுக வேட்பாளர்க‌ளின் பெயரிலேயே களமிறங்குவோருக்கு ‌இது ஒதுக்கப்பட்ட‌‌‌து எப்‌படி? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

திருவாரூரில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். காமராஜ். அவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். அதே ‌தொகுதியில், மற்றொரு சுயேச்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரது ‌பெயரு‌ம் காமராஜ். இது எவ்வாறு நிகழ்ந்தது என்று கேள்வி எழுப்புகின்றது தினகரன்‌ கட்சி. இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக வேட்பாளர் டி.கே ராஜேந்திரனுக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம். இன்னொரு சுயேச்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம். அவரது பெயரும் ராஜேந்திரன்.

அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற‌க் கழக வேட்பாளரான ஆர்.முருகனுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம். அதே பெயரைக் கொண்ட மற்றொரு சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னம் குக்கர். சாத்தூரில் அமமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் எஸ்.சி சுப்பிரமணிய‌ம். இதே‌ பெயரிலான‌ மற்றொரு சுயேச்சைக்கு கிடை‌த்திருக்கும் சின்னம் குக்கர்‌.

அமமுகவுக்கு பொது சின்ன‌த்தை ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம், அந்தக் கட்சி வேட்பாளர்களின் பெயரைக் ‌கொண்ட சுயேச்சைகளுக்கு குக்‌கர் சின்னத்தை வழங்கியிருப்பது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.