டிரெண்டிங்

”தாரைதப்பட்டை, குத்தாட்டம், மாட்டுவண்டி ஊர்வலம்”-வேட்புமனுத் தாக்கல் அலப்பறைகள் - தொகுப்பு

kaleelrahman

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு.

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், இடப்பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளார்கள் முதல் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் வரை விறு விறுப்பாக வித்தியாசமாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அப்படி வேட்புமனுத் தாக்கல் செய்தபோது நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்...

தாரைதப்படை முழங்க குத்தாட்டம் போட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்

நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 7,8,13 உள்ளிட்ட 10 வார்டுகளில் விஜய் மக்கள் மன்றத்தினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். முன்னதாக தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்த அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குத்தாட்டம் போட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கையில் கரும்புடன் களமிறங்கிய நாம் தமிழர் கட்சியினர்

அருப்புக்கோட்டை நகர் மன்றத்தில் உள்ள 36 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் சின்னமான கரும்பு விவசாயியை நினைவுபடுத்தும் வகையில் கரும்புடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கையில் கரும்புடன் வந்த நாம் தமிழர் கட்சியினரை நகராட்சி அலுவலகத்தின் வாயிலிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கரும்புகளை வெளியே போட்டுவிட்டு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கரும்புகளை வெளியே போட்டுவிட்டு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கைக்குழந்தையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர்.

கரூர் மாநகராட்சிக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 36வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரேணுகா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தனது கணவருடன் வந்திருந்தார். அப்போது அவர் தனது எட்டு மாத கைக்குழந்தையை தூக்கியவாறு வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது வேட்புமனுத் தாக்கலின்போது, குழந்தைகளை கூட்டிவரக் கூடாது என உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தினார். இதையடுத்து குழந்தையை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பெண் வேட்பாளர் தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த மநீம வேட்பாளர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 81வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் மாட்டு வண்டியில் வந்தது வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.