அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் எவ்வித தடையுமின்றி முட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத விலை உயர்வால் பள்ளிகளில் சத்துணவு முட்டை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகள் ஆதாரமற்ற, உண்மைக்கு மாறானது என குறிப்பிட்டுள்ளார். அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் எவ்வித தடையுமின்றி முட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
விலை உயர்வால் இத்திட்டத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி சிறப்பாக செயல்படுத்திட அரசு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஜூலை 2018 வரையிலான ஒப்பந்தப்புள்ளிகளில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விலையில் ஒப்பந்ததாரர்கள் எந்த தொய்வுமின்றி முட்டைகளை விநியோகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் அறிக்கை, இத்திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி புரிந்துகொள்ளாமல் அரசியல் செய்யும் நடவடிக்கை என சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.