டிரெண்டிங்

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி - பிடிபி கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி - பிடிபி கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை

rajakannan

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது முதலமைச்சராகவும், நிர்மல் குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். முஃப்தி முகமது உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக 2016, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிடிபி, பாஜக இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. 

அதனையடுத்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெஹபூபாவின் அரசும் கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் மற்றும் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சிகள் இணைத்து ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “ஏன் எங்களுடைய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க கூடாது என்ற கருத்துக்கு வந்துள்ளோம். அரசு அமைப்பது என்ற முடிவுக்கும் இன்னும் வரவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார். 

பிடிபி, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி தலைவர்கள் நாளை காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை சந்தித்து ஆட்சி அமைக்க கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டிசம்பர் 19 ஆம் தேதியுடன் ஆளுநர் ஆட்சிக்கான 6 மாத கால அவசகாம் முடிவடைய உள்ள நிலையில் இந்த புதிய முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 6 மாதத்திற்கு மேல் ஆளுநர் ஆட்சி தொடர முடியாது. வேண்டுமெனில், ஆளுநர் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, பிடிபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட உடன் அக்கட்சிக்குள்ளே சில எம்.எல்.ஏக்கள் மெஹபூபாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜகவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. இதற்கு முன்பாக காங்கிரஸ் - பிடிபி கட்சிகள் 2002-2007 ஆண்டுகளில் கூட்டணி ஆட்சி நடத்தியது. தற்போது, மீண்டும் அதேபோன்ற ஆட்சியை அமைக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இந்தக் கூட்டணியில் இடம்பெற போவதில்லை என்றும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப் போவதாக தேசிய மாநாடு கட்சி தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மெஹபூபா மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பில்லை என்றும் பிடிபி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் முதல்வர் ஆக வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.