டிரெண்டிங்

பிங்க் கலர்ல பெயின்ட் அடிச்சது குத்தமா? - ₹19 லட்சம் ஃபைன் கட்டிய பெண்.. ஏன் தெரியுமா?

பிங்க் கலர்ல பெயின்ட் அடிச்சது குத்தமா? - ₹19 லட்சம் ஃபைன் கட்டிய பெண்.. ஏன் தெரியுமா?

JananiGovindhan

சொந்த வீட்டின் கதவுக்கு தனக்கு பிடித்த கலரில் பெயின்ட் அடித்ததற்காக உரிமையாளருக்கு 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பெர்கில் உள்ள வீட்டு உரிமையாளருக்கு நடந்திருக்கிறது.

ஈடின்பெர்கின் நியூ டவுனில் உள்ள டிரம்மண்ட் பகுதியில் இருக்கிறது மிராண்டா டிக்சன் (48) என்ற பெண்ணின் பரம்பரை வீடு. 1981ம் ஆண்டு டிக்சனின் பெற்றோர் அந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். அவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு கடந்த 18 மாதங்களாக பார்த்து பார்த்து அந்த வீட்டை மிராண்டா புணரமைத்திருக்கிறார்.

ஆனால் வீட்டை புணரமைத்த மகிழ்ச்சி டிக்சனுக்கு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. ஏனெனில் அடையாளம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு ஈடின்பெர்க் சிட்டி கவுன்சிலிடம் இருந்து நோட்டீஸ் விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஈடின்பெர்க் நகரத்திற்கென பாரம்பரிய நெறிமுறைகளை மீறி பிங்க் நிறத்தில் வீட்டின் கதவுக்கு பெயின்ட் அடித்திருக்கிறாராம் மிராண்டா டிக்சன்.

இது தொடர்பாக BBCயிடம் பேசியுள்ள டிக்சன், “இந்த நோட்டீசால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அமலாக்கப் பிரிவின் அறிவிப்பின்படி என் வீட்டு கதவுக்கு அடர் நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டுமாம். ஏனெனில் பிரைட் பிங்க் கலரில் பெயின்ட் அடித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அது லைட் பிங்க்கில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கேலிக்குறியதாக இருக்கிறது.

இதில் அபத்தமான விஷயம் என்னவென்றால், அதேப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளின் கதவுகளில் அடிக்கப்பட்டுள்ள பெயின்ட் பற்றி கவுன்சிலிடம் கேட்டபோது அதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் முன்பே விண்ணப்பித்து அனுமதி வாங்காததால் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

கதவுக்கு வேறு பெயின்ட் அடிக்க வேண்டுமென்றால் மீண்டும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்த பெயின்ட் காய்வதற்கு நாள் முழுவதும் என் வீடு திறந்தே இருக்க வேண்டும். மீண்டும் மாற்றியமைப்பதெல்லாம் அத்தனை சுலபமானதல்ல.” என மிராண்டா டிக்சன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் உலக பாரம்பரிய பகுதியாக இருக்கும் நியூ டவுனிற்கென இருக்கும் சில விதிகளை மீறியுள்ளதால் மிராண்டாவிற்கு 20,000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதாம். தற்போது மிராண்டாவின் வீட்டு கதவு மற்றும் அவரது வீட்டின் உட்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.