டிரெண்டிங்

“மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகம் ; கடன், கடன் என்று சொல்வது தவறு” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி

webteam

சிதம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியளித்தார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். 

கேள்வி : கிட்டதட்ட இரண்டு மாதம்தான் அல்லது இரண்டு வருடம் தான் இந்த ஆட்சி என்று எதிர்கட்சிகள் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால் வெற்றிகரமாக இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் நாடாளுமன்றத்தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி கிடைக்குமா? மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? 

பதில் : நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 22 ஆம் தேதி தொடங்கினேன். அன்று முதல் பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறேன். பரப்புரைக்கு செல்கின்ற இடங்களிலெல்லாம் மக்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது. ஆகவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகள் உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதேபோல் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைப்பார்கள். 

கேள்வி : கர்ப்பிணி திட்டம், திருமண உதவி திட்டம், தமிழகத்தில் உணவு உற்பத்தி புரட்சி என நூற்றுக்கணக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறீர்கள். இத்தனை திட்டங்கள் இருக்கும்போது புதிய தேர்தல் அறிக்கை தேவையா? அதற்கான அவசியம் என்ன?

பதில் : ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் மக்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த அரசாங்கத்தில் இருந்து என்ன திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்ற மனநிலை மக்களிடையே நிலவும். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு திட்டம் முடிந்ததும் அடுத்த திட்டத்தை எடுத்து செய்ய வேண்டிய சூழ்நிலை அரசுக்கு உள்ளது. அதனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அரசின் செயல்பாடுகளை தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களிடம் எடுத்து செல்வது வாடிக்கை. 

கேள்வி: கடந்த நிதி கூட்டத்தில் 5 லட்சம் கோடி பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இப்போது ஒரு திட்டத்தை கொண்டு வருகிறீர்கள். குறிப்பாக ஏழைகளுக்கு 1500 ரூபாய் திட்டம். இதில் என்ன அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் இனியும் பொறுக்க மாட்டோம் ஏழ்மையை ஒழிக்காமல் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழகம் முழுவதும் வறுமைக்கோடு அந்த அளவுக்கு மோசமாக உள்ளதா?

பதில் : அதாவது வறுமைக்கோடு என்பது தவறு. மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகம். மக்களின் எதிர்ப்பார்ப்பை அரசு பூர்த்தி செய்கிறது. அதற்காகத்தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளோம். அதுமட்டுமல்ல வெளிநாட்டில் கடன் வாங்கிதான் இந்திய அரசே நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் புதிய திட்டங்கள் வரும்போது கடன் பெறுவது இயல்பு. அதன் அடிப்படையில் தமிழக அரசு மக்களின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும்போது கடன் வாங்குகிறது. கடன் வாங்குவது கூட முதலீடாக செய்ய முடிகிறது. எல்லாமே செலவு கிடையாது. ஒரு கட்டடம் கட்டினால் முதலீடு. தொழிற்சாலை ஆரம்பித்தால் முதலீடு. ஒரு புதிய மின் திட்டங்களை கொண்டுவரும்போது அதில் முதலீடு செய்கிறோம். அதுக்குத்தான் கடன் வாங்குகிறோம். மின் திட்டத்தின்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுத்து அதன்மூலம் வருவாய் ஈட்டுகிறோம். அதன் மூலம் கடனை அடைக்கிறோம். இதை கடன் என்று சொல்வது தவறு. ஒரு திட்டத்தை நிறைவேற்ற முழுசா அரசாங்கத்துகிட்டேயே பணம் இருக்காது. பல நிறுவனத்திடம் இருந்து உலக வங்கிகளிடம் இருந்து கடனை பெற்று திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.