தமிழகம் முழுவதும் வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசுத் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க சட்டரீதியான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம் பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். மாலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த முதலமைச்சர், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் சக்தி பிரதமர் மோடிக்கு மட்டுமே உண்டு என்றார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஸ்டாலின் கூறுவது பொய் வாக்குறுதிகள் என்றும், அதனால், திமுகவின் தேர்தல் அறிக்கையும் பொய்தான் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். இதையடுத்து இரவில் கே.புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் தமிழகம் மின்வெட்டு இல்லாத மின்மிகை மாநிலமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.