டிரெண்டிங்

எட்டு தொகுதிகளில் வென்றால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும்

எட்டு தொகுதிகளில் வென்றால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும்

webteam

20 தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் அன்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் எனவும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். 

இதனால் 18 தொகுதிகள் அல்லாமல் ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது.

எனவே 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை 109 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். நடக்கவிருக்கும் 20 தொகுதி இடைத்தேர்தலில் 8 தொகுதி கண்டிப்பாக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிர்பந்தம் அதிமுகவுக்கு உள்ளது. 

இந்நிலையில், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி, 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனவும் கண்டிப்பாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.