முதல்வரை முன்னிறுத்திதான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேவையான தளர்வுகளை தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வருகிறது. எம்ஜிஆர் காலத்திற்கு பின்னர் பல்வேறு சோதனைகளை அதிமுக சந்தித்தது. அதன்பின் அதிமுகவை இந்தியாவில் 3-வது மாபெரும் இயக்கமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக நிற்குமா? நிலைக்குமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் எளிமையின் அடையாளமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின் படியும் அதிமுக செயல்படும். இந்த ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள். ஒற்றுமையுடன் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும். ஈபிஎஸ்- ஒபிஎஸ் முன்னிறுத்தியே சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும். ஏற்கனவே கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக, ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துதான் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கருத்தாக உள்ளது” எனத் தெரிவித்தார்.