டிரெண்டிங்

"மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது அவதூறு பரப்புகிறார்"-முதல்வர் பழனிசாமி

"மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது அவதூறு பரப்புகிறார்"-முதல்வர் பழனிசாமி

kaleelrahman

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். இந்த தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதியாக கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது...

வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். திமுகவின் குடும்ப அரசியல் ஒழியக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். இந்த தேர்தலோடு திமுக குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் வரலாம், கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. அதனால் வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்து திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அதை தடுத்து நிறுத்தியது அதிமுக. மேலும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் அதிமுக தான். இலவச கேபிள் இணைப்பு, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1500, அம்மா வாசிங்மிஷின் என தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அறிவித்து பல திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக அரசு தான்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாய பம்புசெட்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.யாராக இருந்தாலும் பாகுபாடின்றி வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். எந்த ஆட்சியிலும் மாணவர்களின் மருத்துவ படிப்பு செலவை ஏற்றதில்லை. அதிமுக அரசு தான் ஏழை மாணவிகளின் கல்வி செலவை ஏற்றது. கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முந்திரி தொழிற்சாலை இந்த பகுதியில் அமைத்து தரப்படும் என்று பேசினார்.