டிரெண்டிங்

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? விவரம் வெளியீடு!

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? விவரம் வெளியீடு!

webteam

தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆ‌ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விவகாரத்தை தேனி மக்களவைத் தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சாகுல் அமீது உள்ளிட்ட கட்சியினர் வெளிப்படுத்தினர். பின்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கு திரண்டு,‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விவரங்களை கேட்டனர். 

அப்போது, இடைத்தேர்தல் நடைபெற்ற ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மணவாளன் கூறினார். இதனால் அதிர்ந்து போன அரசியல் கட்சியினர், எந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுக்காத நிலையில் ‌மறுவாக்குப்பதிவு எதற்கு என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அத்துடன் 46 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி விவரங்கள் இன்று காலை வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்த 195 வது வாக்குச்சாவடி,   தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்ட, 181, 182, 192, 193, 194, 195, 196, 197 ஆகிய எட்டு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடக்கிறது. 

கடலூர் தொகுதியில், பண்ருட்டியில் உள்ள திருவதிகை நகராட்சி உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, ஈரோடு தொகுதியில் காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 248ஆம் வாக்குச்சாவடி, தேனி தொகுதியில் ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி, பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடைபெறுகிறது.