இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் மக்கள், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல், ஆர்கே நகர் இடைத் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டியுள்ளதால், இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பணிகளை அதிமுக அம்மா அணி மற்றும் புரட்சி தலைவி அம்மா அணியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட இவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.