காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் மக்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆட்சியாளர்கள் திசைதிருப்ப கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இத்தகைய சூழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் இரையாகிவிடக் கூடாது என வேல்முருகன் கூறியுள்ளார்.
சேப்பாக்கத்தில் வரும் 10ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநேரம் கிரிக்கெட் விளையாட்டிற்கோ, அதன் ரசிகர்களுக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். தங்களின் நியாயமான கோரிக்கை புறந்தள்ளப்பட்டால், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.