மத்தியப் பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் நகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் ஈடுபட்டிருந்தனர். பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் இந்தூர்-3 தொகுதி எம்.எல்.ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா அங்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். கட்டடங்களை இடிக்க வேண்டாமென அதிகாரிகளை அவர் தடுத்து நிறுத்தினார்.
அப்போது, நகராட்சி அலுவலர்களுக்கும் ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கோபமடைந்த ஆகாஷ் அலுவலரை அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இதனையடுத்து, அதிகாரிகளை அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆகாஷ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு, அவரது அலுவலகத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்களோடு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோவும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக அவர் சிறையில் இருக்கும் போதே அவருக்கு ஆதரவாக இந்தூர் நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய ஆகாஷூக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசிய மோடி, “ஆகாஷ் யாருடைய மகன் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. இத்தகைய நடத்தை முற்றிலும் ஏற்புடையது அல்ல” என்று கூறினார். அத்துடன், ஆகாஷ் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை வரவேற்க துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்” என மோடி தெரிவித்தார்.