டிரெண்டிங்

“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா?” - டிடிவி தினகரன் கேள்வி

“பொய் வழக்குப் போட்டு கைது செய்வதா?” - டிடிவி தினகரன் கேள்வி

webteam

கழகத் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுவது தொடர்ந்தால் ராமநாதபுர மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முத்துராமலிங்க தேவரின் 111 வது குருபூஜை கடந்த 30 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனால் மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி மதுரை சாலையில் ஏராளமான அதிமுக பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்சிக்கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அவர்களை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை சாலை வழியாக தினகரன் வந்தபோது அமமுகவினரால் பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும் அமமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கழகத் தொண்டர்களின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து வரும் எடப்பாடி அரசின் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் இப்போக்கு தொடருமானால் அம்மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.