டிரெண்டிங்

திமுகவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திமுகவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

webteam

2016-17ம் ஆண்டு நிலவரப்படி, நிதிநிலை அடிப்படையில் மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சியின் கணக்கு தணிக்கை அறிக்கை மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

திமுக பொதுக்குழுவில் 2016-17ஆம் ஆண்டுக்கான நிதித் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வங்கியில் டெபாசிட் வட்டியாக மட்டும் 19 கோடி ரூபாய் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. வழக்குகளுக்காக மட்டும் 11 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17ல் தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு -செலவு கணக்கின்படி, சென்னை அன்பகம் நிலம், தஞ்சாவூர் நிலம், திருச்சி, திருப்பூர் நிலம் பிற மாவட்ட தலைநகரங்களில் உள்ள நிலங்களின் அசையா சொத்துகளின் மதிப்பு 7.41 கோடி. அறிவகம், அன்பகம், சேலம் அழகாபுரம் கட்டடம், காஞ்சி திராவிட நாடு கட்டடம், தஞ்சாவூர், சேலம், திருப்பூர், திருச்சி கலைஞர் அறிவாலயம் மற்றும் உள்கட்டமைப்பு வேலைகள், மரச்சாமான்கள் மின்சாதனங்கள் உட்பட மொத்த சொத்து மதிப்பு 9. 3 கோடி ரூபாய். மோட்டார் வாகனங்கள், கார்கள் மற்றும் இதர சாதனங்களின் மொத்த சொத்து மதிப்பு 2,74 கோடி ரூபாய்

சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைகளில் மட்டும் நிரந்தர வைப்புத் தொகையாக 162 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் உள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் திமுகவின் சொத்து மதிப்பு 89.32 கோடி ரூபாய். ஐந்து ஆண்டுகளில் உயர்ந்து 2015-16 ஆம் ஆண்டில் திமுகவின் சொத்து மதிப்பு 246.98 கோடி ரூபாய். ஆனால், தற்போது திமுகவின் சொத்து மதிப்பு 165.11கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 82 கோடி ரூபாய் சொத்து மதிப்பு குறைந்துள்ளதற்கு காரணம் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக செலவு செய்ததாக கணக்கில் கூறப்பட்டுள்ளது.