டிரெண்டிங்

மாணவர்களின் உணர்வுகளை தூண்டாதீர்கள் - பொன்.ராதா வலியுறுத்தல்

மாணவர்களின் உணர்வுகளை தூண்டாதீர்கள் - பொன்.ராதா வலியுறுத்தல்

webteam

மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமான செயல்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட வேண்டாம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "அனிதாவின் மரணத்தால் வாடிக்கொண்டிருக்கும் ஏழை பெற்றோர் மனம் நிம்மதி பெற வேண்டும் என்று இறைவனை பிரார்திக்கிறேன். அவரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்திக்கிறேன். இது போன்ற துயர செயல்களை, எக்காரணம் கொண்டும் குழந்தைச் செல்வங்கள் செய்யக் கூடாது. அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்களுக்கு மன உறுதி, துணிச்சலைக் கொடுக்கும் வகையில் பேச வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்கள் நம்பிக்கை இழக்கும் வகையிலோ, தவறான முடிவுகளை எடுக்க வைக்கும் வகையிலோ தலைவர்கள் பேசக் கூடாது." என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் "சில நாட்கள் கழித்து அனிதாவின் வீட்டிற்கு சென்று, அவரின் பெற்றோரை சந்திக்க உள்ளேன். இந்த நேரத்தில் சில விஷயங்களை பேசுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது சரியாக இருக்காது. அரசியல் கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதற்கெல்லாம், பதில் சொல்லக் கூடிய நிலையில் நான் இல்லை. நான் பதில் சொன்னால் பல பேர் தங்கள் நிலையிலிருந்து கீழிறங்க வேண்டி இருக்கும். மிகப் பெரிய மனச்சுமையுடன் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அனிதா மரணம், அந்த குடும்பத்துக்கு மட்டுமோ, அந்த கிராமத்திற்க்கு மட்டுமான இழப்பு இல்லை, இது ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான இழப்பு. இது போன்ற நிகழ்வுகள் மேலும் நிகழக் கூடாது" என்று கூறினார்.