டிரெண்டிங்

"தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கவும்" கமல்ஹாசன் வேண்டுகோள்

"தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கவும்" கமல்ஹாசன் வேண்டுகோள்

webteam

மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் ஆதரவும் தெரிவித்தனர். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் கமல் பங்கேற்ற கூட்டத்தில் அவரை நோக்கி சிலர் காலணி வீச்சில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில் முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. மேடையை நோக்கி கற்களை வீசிய இரண்டு நபர்களை கூட்டத்திலிருந்த மக்கள் நீதி மய்யத்தினர் பிடித்து சரமாரியாக தாக்கினர். கல் வீசிய நபரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ''ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர்! அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே!'' என்று தெரிவித்துள்ளார்