தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் என பல மாவட்டங்களில் இதுவரை அவர் ஆய்வு செய்துள்ளார். ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநர் அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தஞ்சையில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த திமுகவினர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்து செல்லும்போது கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டனர். மேலும், சிலர் கருப்புக்கொடியை வாகனத்தின் மீது வீசவும் முற்பட்டனர். அதைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு தூய்மை இந்திய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக, தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம் செய்த ஆளுநர் தொடர்ந்து, அருளானந்தா நகரில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தார். மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆளுநர் புரோஹித் பங்கேற்கிறார்.