டிரெண்டிங்

அரசின் இ-கொள்முதல் திட்டத்திற்கு இடம் வழங்க முன்வந்த திமுக எம்எல்ஏ

webteam

விவசாயிகளுக்கு ஆதரவாக இ கொள்முதல் திட்டத்திற்கு தேவைப்பட்டால் தேனியில் உள்ள தனது இடத்தைத் தரத் தயாராக இருப்பதாக திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார்கள் வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் 100 சதவீதம் இ-கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததைச் சுட்டிக்காட்டினார். 

இ-கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டனவா?, அப்படி வரவில்லை என்றால் நடப்பு பருவத்திலேயே, சோதனை அடிப்படையில் இ-கொள்முதல் திட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யுங்கள் என்று கூறினார். 
இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், டெல்டா பகுதிகளில் 100 சதவீதம் இ-கொள்முதல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 73,367 விவசாயிகளுக்கு ரூ.332.89 கோடி இசிஎஸ் முறையில் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

வங்கியில் நேரடியாக பணம் செலுத்துவது என்பதோடு நின்றுவிடாமல், 100 சதவீதம் இ-கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று பிடிஆர் தியாகராஜன் வலியுறுத்தினார். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பேசுவதாக அமைச்சர் கூறினார்.

பின்னர் அவைக்கு வெளியே இதுகுறித்து பேசிய தியாகராஜன், ஜெயலலிதா அறிவித்தபடி, நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு எடை இயந்திரங்கள், எடை இயந்திரங்கள் லோக்கல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு எடை பதிவு செய்தல், லோக்கல் கம்ப்யூட்டர் அரசு நெட்-ஒர்க்குடன் இணைக்கப்பட்டு மைய டேட்டா சென்டரில் தனித்தனியாக பதிவு செய்தல், முறைகேடுகளை தவிர்க்க நெல்லுக்கான தொகையை சிறப்பு கணினி செயலி மூலம் விவசாயிகளின் கணக்கில் செலுத்துதல், நெல்லுக்கான விலை, எடை மற்றும் அது யாருடையது என்பதை சென்ட்ரல் டேட்டாவில் பதிவு செய்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் இ கொள்முதல் தொடர்பாக ஆராய்ச்சிகள் அல்லது வேறு உதவிகள் தேவைப்பட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சரிடம் தெரிவித்ததாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.