டிரெண்டிங்

கவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து

webteam

பறை இசை முழங்க இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தமிழ்ச் சமூக வார்ப்புகளான சகோதரி கவுசல்யா - சக்தி ஆகிய இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கவுசல்யா, சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால், கவுசல்யாவின் பெற்றோர் சங்கரை ஆணவப் படுகொலை செய்தனர். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தமிழகத்தையே உலுக்கியது. பல அரசியல் தலைவர்களும் இந்த ஆணவப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது கவுசல்யாவும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

இதையடுத்து கவுசல்யாவின் அப்பா, அம்மா உள்பட 11 மீது வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே கவுசல்யா ஆணவப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை கவுசல்யா இன்று சுயமரியாதை மறுமணம் செய்து கொண்டார். கோவையில் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பறை இசை முழங்க இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தமிழ்ச் சமூக வார்ப்புகளான சகோதரி கவுசல்யா - சக்தி ஆகிய இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இல்வாழ்விலும், சமூக வாழ்விலும் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.