டிரெண்டிங்

மோடிக்கு எல்லா நாளும் விடுமுறைதான்: அமித்ஷாவின் விமர்சனம் குறித்து ஸ்டாலின்

மோடிக்கு எல்லா நாளும் விடுமுறைதான்: அமித்ஷாவின் விமர்சனம் குறித்து ஸ்டாலின்

webteam

தமது விமர்சனத்தின் மூலம் எதிர்க்கட்சிகள்தான் தேர்தலில் வெற்றிப்பெற போகின்றன என்பதை அமித்ஷாவே ஒப்புக்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஒரு வாரத்தில் 6 பிரதமர்க‌ள் ஆட்சி புரியும் நிலை ஏற்படும் என கிண்டல் அடித்தார். 

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை அகிலேஷ் யாதவும், செவ்வாய்கிழமை மாயாவதியும் பிரத‌மராக இருப்பார்கள் ‌என்றார்.

புதன்கிழமை மம்தா பானர்ஜியும் வியாழக்கிழமை தேவ கவுடாவும் பிரதமராக இருப்பா‌ர்கள் என அமித் ஷா தெரிவித்தார். சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்றும் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை விடப்படும் என்றும் அமித் ஷா பேசினார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியில் அமைக்கப்பட்ட முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 8 அடி உயர சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மெகா கூட்டணி அமைத்துள்ள எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமராக இருப்பார் என அமித்ஷா விமர்சித்துள்ளதாகவும், இதன்மூலம், எதிர்க்கட்சிகள்தான் ஆட்சிக்கு வரப்போகின்றன என்பதை அமித்ஷாவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறினார். 

ஒருநாளாவது பிரதமர் மோடி இந்தியாவில் இருந்தது உண்டா என கேள்வியெழுப்பிய அவர், மோடிக்கு எல்லா நாளுமே விடுமுறைதான் என்றும் விமர்சித்தார்.