டிரெண்டிங்

ராமர் பாலம் குறித்து கேலி பேசிய திமுக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை

ராமர் பாலம் குறித்து கேலி பேசிய திமுக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை

webteam

ராமர் பாலம் குறித்து கேலியாக பேசிய திமுக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, “ராமர் பாலம் கட்டியவர்கள் எந்த கல்லூரியில் படித்தார்கள் என கேலி பேசிய திமுக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக, ஆனந்த்குமார் ஹெச்டேவின் ட்விட்ரில் உள்ள செய்தியை குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். ராமர் பாலத்தை ஆதாம் பாலம் என்று கூறிவந்தவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் இது மனிதரால் கட்டப்பட்ட பாலம் என்று கூறி கேலி பேசியவர்களை கன்னத்தில் அறைந்துள்ளது என்றும் ஹெக்டே கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சயின்ஸ் சேனல், ராமர் சேது பாலம் இயற்கையானது அல்ல, அது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற ஆய்வு முடிவை நிகழ்ச்சி முன்னோட்டமாக வெளியிட்டது. விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதே பாஜகவின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதே கருத்தை மற்றொரு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தும் தெரிவித்துள்ளார். மேலும், சேது பாலம் இயற்கையான மணல் திட்டு என உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த காங்கிரஸ் இதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி 2006 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கூறிய பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடும் விமர்சனம் செய்தார். ராமர் பாலம் என்று கூறி தமிழகத்திற்கு பொருளாதார ரீதியாக ஏற்றம் தரக்கூடிய சேதுசமுத்திரத் திட்டத்தை பாஜக எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்போது, “ராமர் எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்து அங்கு பாலம் கட்டினார்?” என்றும் கேள்வியெழுப்பினார். கருணாநிதியின் இந்த விமர்சனம் தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளானது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாக தமிழிசை, ராமர் பாலம் குறித்து கேலி பேசியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.