டிரெண்டிங்

திமுக உயர்நிலை கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக உயர்நிலை கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

webteam

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் பணியாற்றத்தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்‌சர் ஆ.ராசா உள்ளிட்ட 23 பேர் பங்கேற்‌றனர். மாலை 5 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இதில் ஆ.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்த விவகாரம், 2ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஒகி புயல் பாதிப்பு, சேத விவரங்கள் குறித்த மத்திய குழுவின்‌ ஆய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அத்துடன் வரும் 8ஆம் தேதி கூட உள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட வேண்டிய பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமார் 40 நி‌மிடங்கள் நடைபெற்‌ற ஆலோசனைக்குப்பின் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல் தீர்மான‌ம் நிறைவேற்றப்பட்டது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், புயல் நிவாரணத்திற்காக ரூ.13,520 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பெரும்பான்மையை இழந்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக  செயல்பட்டு வரும் தமிழக அரசு, ஜனநா‌யகத்திற்கே ஒரு களங்கம் எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 2ஜி எனும் மாயாவி காற்றில் கலந்த கற்பனைக் கணக்கு என்ற தீர்மானமும் நிறைவேறியது.