டிரெண்டிங்

தி.மு.க ஆட்சியில் “விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்” இயற்றி தமிழகம் மீட்போம் : ஸ்டாலின்

தி.மு.க ஆட்சியில் “விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்” இயற்றி தமிழகம் மீட்போம் : ஸ்டாலின்

Veeramani

விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, கேரளா அரசு போல் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அரசு கொண்டுவர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்“மத்திய பா.ஜ.க. அரசு, எதிர்ப்புகளுக்கிடையேயும் நிறைவேற்றி இருக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் காரிருள் சூழ வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஆவேசமான எதிர்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. இந்த வேளாண் சட்டங்களினாலும் - அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ள எடப்பாடி அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையாலும், தீபாவளிப் பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது.

இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் பருப்பு விலை 25 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்தது. சமையல் எண்ணெய் விலை உயர்ந்து - இன்றும் தொடருகிறது. வெங்காய விலையோ கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை உயர்ந்து ஏழை - எளிய, நடுத்தர மக்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. பிறகு வெங்காய விலை இறங்குமுகமாகி - இப்போது உருளைக்கிழங்கு விலை ஏறுமுகமாகி விட்டது. ஒரு கிலோவிற்கு 25 முதல் 60 ரூபாய் வரை அதிகரித்து - இன்றைக்கு உருளைக்கிழங்கையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியச் சந்தை வந்து விட்டது.

வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக் கிழங்கு, காய்கறிகள், என அனைத்துப் பொருட்களும், இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தாராளமாகக் கிடைப்பது செயற்கையாகத் தடுக்கப்பட்டு விட்டது. விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு - தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இடைத்தரகர்களால் விலை ஏற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தில் – எவ்வளவு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ” அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் - விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் சுதந்திரம் மற்றும் பொதுமக்கள் நியாயமான விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் சுதந்திரம் ஆகிய இரண்டையும் பறித்திருக்கிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, அவர்களுடைய செலவு மற்றும் உழைப்புக்கேற்றபடி உரிய விலை கிடைக்க வேண்டும், மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் “உழவர் சந்தைகள்” தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் பெரும்பாலான அந்த உழவர் சந்தைகளை அ.தி.மு.க. அரசு செயலிழக்க வைத்து - அந்த சந்தைகளை அப்படியே பாழாக்கி இழுத்து மூட வைத்து விட்டது. உழவர் சந்தையை ஒழித்து விட்டு - விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆதரவளித்து விட்டு, இன்றைக்கு “போலி விவசாயி” வேடம் தரித்து, போராளிகளான விவசாயிகளின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிறார்.மூன்று வேளாண் சட்டங்களின் பாதிப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றிட - குறைந்த பட்ச ஆதார விலைக்குக் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிறைத் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கின்றன. கேரள மாநில அரசு சமீபத்தில் வரவேற்கத்தக்கச் சட்டம் ஒன்றை - இந்தியாவிலேயே முதல் முறையாகக் கொண்டு வந்து - காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளது. 16 வகை காய்கறிகளுக்கு விவசாயிகளின் உற்பத்தி விலையில் இருந்து 20 சதவீதம் அதிகம் கொடுக்க வேண்டும் என்றும் - இந்த காய்கறிகளின் சந்தை விலை குறைவாக இருந்தால் கூட இந்த அடிப்படை விலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டத்தில் உறுதி செய்திருக்கிறது.

விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றும் அந்தச் சட்டம் தமிழ்நாட்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இங்குள்ள திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியோ விவசாயிகள் பற்றியும் கவலைப்படவில்லை; கேரள அரசு கொண்டு வந்தது போன்றோ, பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது போன்றோ எந்த விதமான “விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்களையும்” கொண்டு வரத் துணிச்சல் இல்லை.

அ.தி.மு.க. அரசுக்கு இப்போது கடைசி நேர அவசரம் - டெண்டர்! கமிஷன்! அதைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் தடுக்க மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் - வரம்பின்றி இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சர் திரு. பழனிசாமி ஊழல் டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துவதைக் கைவிட்டு- காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி - கேரளா அரசு போல் “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. அரசு உடனே சட்டம் கொண்டு வரவில்லையென்றால் - விரைவில் மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைக்கப்போகும் திராவிட முன்னேற்றக் கழகம், கேரள மாநில அரசு கொண்டு வந்திருப்பது போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரும் என்றும் - அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும்; விவசாயப் பெருமக்களின் துயர் துடைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் படிப்படியாக மேற்கொள்வோம் என்றும்; உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.