டிரெண்டிங்

திமுகவுக்கு தலைவலியான ஆர்.கே.நகர்

திமுகவுக்கு தலைவலியான ஆர்.கே.நகர்

webteam

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த தேர்தல். கருணாநிதிக்கு பின்னர் இனி கட்சியை வழிநடத்தப்போகிறவர் என்பதால் அவரது தலைமையில் திமுக களம் கண்ட இந்தத்தேர்தல் அனைவராலும் கவனிக்கப்பட்டது. திமுகவின் பரம எதிரியான ஜெயலலிதாவும் இல்லை, அதிமுகவிலும் பிளவு, உட்கட்சிப் பூசல் வேறு. எனவே திமுகவிற்கு சாதகமாகத் தான் தேர்தல் முடிவு இருக்கும் என அக்கட்சியினர் நம்பி இருந்தனர். திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்தது. டிடிவி தினகரன் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 

எதிர்க்கட்சியான திமுக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது. ஒரு நிலையான தலைமை இல்லாமல் அதிமுக இருக்கும் நிலையில் அவர்களை திமுகவால் வீழ்த்த முடியவில்லை. மூன்றாம் இடம் தான் திமுகவிற்கு கிடைத்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மு.க.அழகிரியின் பேச்சு இருந்தது. ஸ்டாலின் தலைமையின் கீழ் திமுக வெற்றி பெறாது என தெரிவித்தார். மு.க.அழகிரி, ஸ்டாலினை விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஓர் இடைத்தேர்தல் முடிவு கட்சியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்றாலும், ஸ்டாலின் அரசியல் கனவுகளை இம்முடிவு கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. இதனையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்வதற்காக திமுகவின் கொறடா சக்கரபாணி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அடிமட்டத்தொண்டர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று சக்கரபாணி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்தாகக்  கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக நிர்வாகிகள் 120க்கும் மேற்பட்டோர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மருதுகணேஷ் ஓர்  அணியாகவும். முன்னாள் வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் ஓர் அணியாகவும் பிரிந்தனர். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கவேண்டும் எனக் கூறி மூத்த நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நிர்வாகிகள் தேர்வு நடைபெறாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து நாளை மீண்டும் ஆலோசிக்கப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.